சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த கமலாபுரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆசிரியை ஒருவர் சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கண் முன்னே வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாக ஆசிரியையின் கணவரே இந்தப் பயங்கரத்தைச் செய்தது தெரியவந்துள்ளது.

பள்ளி இயங்கிக் கொண்டிருந்த போதே உள்ளே புகுந்த அவர், மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் ஆசிரியையைச் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஆசிரியை, இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

தகவல் அறிந்த ஓமலூர் டிஎஸ்பி சஞ்சீவ்குமார் தலைமையிலான போலீஸார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆசிரியையின் கணவர் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

கல்வி கற்க வேண்டிய பள்ளியிலேயே ஆசிரியை ஒருவருக்கு நேர்ந்த இந்த விபரீதம், சக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படுகொலை குறித்து போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.