தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ படத்தைச் சுற்றி அடுத்தடுத்துப் பல அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. தணிக்கை சிக்கல் காரணமாக கடந்த மூன்று மாதங்களாகத் திரைக்கு வராமல் முடங்கிக்கிடந்த இந்தப் படம், கடந்த 10-ஆம் தேதி சட்டவிரோதமாக இணையத்தில் வெளியாகி ஒட்டுமொத்தத் திரைத்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இதற்குக் கண்டனம் தெரிவித்த நிலையில், சைபர் கிரைம் போலீஸார் அதிரடி வேட்டையில் இறங்கி இதுவரை 6 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும், படத்தை வெளியிட்ட 100-க்கும் மேற்பட்ட இணையதளங்கள் அதிரடியாக முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இணையத்தைத் தொடர்ந்து தற்போது உள்ளூர் கேபிள் டிவிகளிலும் இப்படம் ஒளிபரப்பப்பட்டது விஜய் ரசிகர்களையும், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளையும் கொந்தளிக்கச் செய்துள்ளது. கோவை மாவட்டத்தின் கருமத்தம்பட்டி, சூலூர், அவினாசி உள்ளிட்ட பகுதிகளில் உள்ளூர் கேபிள் டிவியில் ‘ஜனநாயகன்’ படம் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

தகவலறிந்து த.வெ.க-வினர் கொடுத்த புகாரின் பேரில், சுமார் 2 மணி நேரம் ஓடிய படம் உடனடியாக நிறுத்தப்பட்டது. “தியேட்டரில் பார்த்து ரசிக்க வேண்டிய படத்தை இப்படிச் சீரழிப்பதா?” என ரசிகர்கள் ஆவேசமடைந்துள்ளனர்.

இது தொடர்பாகக் குறிப்பிட்ட கேபிள் டிவி நிறுவனங்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் நடந்த இந்தச் சம்பவம் தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.