மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொருளாதாரச் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் உலக நாடுகளுக்கு ஆறுதல் அளித்த நிலையில், தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

பாகிஸ்தான் முன்னிலையில் சனிக்கிழமை முதல் நடைபெற்று வந்த அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக அமெரிக்க அதிபர் ஜே.டி.வான்ஸ் (JD Vance) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனால் மீண்டும் போர் தொடங்கும் அபாயம் அதிகரித்துள்ள சூழலில், பாகிஸ்தான் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது.

கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதியன்று, பாகிஸ்தானைச் சேர்ந்த சுமார் 13,000 ராணுவ வீரர்கள் மற்றும் 10 முதல் 18 போர் விமானங்கள் சவுதி அரேபியாவின் கிங் அப்துல்அஜிஸ் விமான தளத்திற்கு விரைந்துள்ளன. ஏற்கனவே சவுதியில் 10,000 பாகிஸ்தான் வீரர்கள் உள்ள நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 23,000-ஆக உயர்ந்துள்ளது.

ஈரான் நடத்திய தாக்குதலில் சவுதி குடிமகன் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, தனது பாதுகாப்பை உறுதி செய்ய சவுதி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. 2025-இல் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி, ஒரு நாட்டின் மீதான தாக்குதல் இரு நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும்.

இந்த ராணுவ நகர்வு ஈரானுக்கு எதிரான போருக்கான முன்னேற்பாடா அல்லது தற்காப்பு நடவடிக்கையா என்ற கேள்வி உலகரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.