மகாராஷ்டிர மாநிலம் ஜால்னா மாவட்டத்தில் உள்ள சிரச்வாடி கிராமத்தில், தனது தாய்க்கு அடிக்கடி குறுஞ்செய்தி அனுப்பிய ஆத்திரத்தில் 26 வயது இளைஞரை 17 வயது சிறுவன் ஒருவன் கொடூரமாகக் கொலை செய்துள்ளான். உயிரிழந்த நிகில் அனில் வாக்மாரே மற்றும் அந்தச் சிறுவன் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.

வழக்கம் போல நிகில் தனது நண்பர்களுடன் வயலில் உறங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவு 12 மணியளவில் அங்கு வந்த அந்தச் சிறுவன், தூங்கிக் கொண்டிருந்த நிகிலை கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டுத் தப்பியோடினான்.

இந்தச் சம்பவத்திற்கு முன்னதாக, தனது தாயின் செல்போனில் நிகில் அனுப்பியிருந்த செய்திகளைப் பார்த்த அந்தச் சிறுவன் கடும் கோபமடைந்து இக்கொலையைச் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட நிகிலின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதுடன், பிளஸ் 2 தேர்வு எழுதி முடித்திருந்த அந்த 17 வயது சிறுவனைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட இந்த மோதல் கொலையில் முடிந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.