உத்தரப் பிரதேச மாநிலத்தில், டேட்டிங் ஆப் மூலம் பழகிய பெண்ணை நம்பிச் சென்ற இளைஞர் ஒருவர் தனது நகை மற்றும் பணத்தை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசியாபாத்தைச் சேர்ந்த அந்த இளைஞர், டேட்டிங் ஆப்பில் அறிமுகமான பெண்ணுடன் நீண்ட நேரம் உரையாடி வந்துள்ளார். ஒருகட்டத்தில் நேரில் சந்திக்கலாம் என அந்தப் பெண் அழைத்ததை அடுத்து, இருவரும் ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளனர்.
ஆனால், மறுநாள் காலை இளைஞர் எழுந்து பார்த்தபோது, அந்தப் பெண் மாயமாகி இருந்தார். அத்துடன் இளைஞர் அணிந்திருந்த தங்கச் செயின் மற்றும் பணப்பையில் இருந்த பணத்தையும் அந்தப் பெண் திருடிச் சென்றது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட இளைஞர் அளித்த புகாரின் பேரில், போலீசார் ஹோட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அந்தப் பெண்ணைக் கைது செய்தனர்.
விசாரணையில், அந்தப் பெண்ணுடன் சேர்ந்து ஒரு கூட்டாளியும் இந்த மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து திருடப்பட்ட நகை மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது போன்ற டேட்டிங் ஆப் தளங்களில் முன்பின் தெரியாத நபர்களை நம்பிச் செல்லும்போது இளைஞர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அந்தப் பெண் இதற்கு முன்பும் இதுபோல பலரை ஏமாற்றியுள்ளாரா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
