மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதைச் சமாளிக்க இந்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மாற்றாக, குழாய் மூலம் விநியோகிக்கப்படும் இயற்கை எரிவாயுவை ஊக்குவித்து வருகிறது. கடந்த ஐந்து வாரங்களில் மட்டும் சுமார் 4 லட்சம் பேர் புதிய இயற்கை எரிவாயு இணைப்புக்கு மாறியுள்ளனர்.

வீடுகளுக்கு தடையின்றி எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு முன்னுரிமை அளிப்பதோடு, சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க போதுமான இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குத் தேவையான எரிவாயு விநியோகமும் தற்போது சீராகி வருகிறது.

குறிப்பாக, புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவும் வகையில் 5 கிலோ சிலிண்டர் விற்பனை இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், மருந்து தயாரிப்பு, உரத் துறை மற்றும் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்குத் தேவையான எரிவாயு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகிறது.

இந்தியாவின் கச்சா எண்ணெய் கையிருப்பு போதுமான அளவில் உள்ளதால், உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் எவ்வித பாதிப்பும் இருக்காது என்று பெட்ரோலிய அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.