அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகப் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்குப் புறப்பட்டார். புறப்படுவதற்கு முன்னதாக அவர் ஈரானுக்குக் கடுமையான எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.

ஈரான் உண்மையாகவும், நேர்மையாகவும் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால் அமெரிக்காவும் அதேபோல் செயல்படும் என்றும், ஆனால் ஏமாற்றவோ அல்லது காலம் கடத்தவோ முயன்றால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிபர் டொனால்ட் டிரம்பின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் நடைபெறும் இந்தப் பேச்சுவார்த்தை, மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவர எடுக்கப்படும் மிக முக்கியமான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

முன்னதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிகப் போர் நிறுத்தத்தை நிரந்தரமாக்கவும், எண்ணெய் வழித்தடத்தை மீண்டும் திறக்கவும் இந்த ‘இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை’ வழிவகை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால் உலகளவில் பதற்றம் தணிந்து பொருளாதாரச் சூழல் சீராகும், இல்லையெனில் போர் மீண்டும் தீவிரமடையும் அபாயம் உள்ளது.