ஆன்லைன் வேலை வாய்ப்பு நேர்காணல் ஒன்றில், ‘தாரோ ஐகுச்சி’ என்ற ஜப்பானிய பெயரில் விண்ணப்பித்த ஒரு ஐடி ஊழியர், தனது திறமையால் அனைவரையும் கவர்ந்தார். அவரிடம் லிங்க்ட்இன் (LinkedIn), கிட்ஹப் (GitHub) என அனைத்துமே பக்காவாக இருந்தன. ஆனால், அவர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் ஒரு விசித்திரமான கேள்வியைக் கேட்டனர்.

​”வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பற்றி ஒரு அவதூறான வாக்கியத்தைச் சொல்ல முடியுமா?” என்பதுதான் அந்த கேள்வி. இதைக் கேட்ட அடுத்த நொடியே, அதுவரை சிரித்துப் பேசிக்கொண்டிருந்த அந்த நபரின் முகம் அப்படியே மாறியது. வடகொரிய சட்டப்படி அவர்களின் தலைவரைத் திட்டுவது மிகப்பெரிய தேசத்துரோகம் என்பதால், பயத்தில் உறைந்து போன அவர் உடனடியாக வீடியோ காலைத் துண்டித்தார்.

​இதன் மூலம் அவர் வடகொரியாவைச் சேர்ந்தவர் என்பதும், போலி அடையாளத்துடன் வேலை தேடியதும் அம்பலமானது. வடகொரியாவின் ஐடி ஊழியர்கள் பலரும் இதுபோல போலி அடையாளங்களில் வெளிநாட்டு நிறுவனங்களில் ஊடுருவி, தங்கள் நாட்டுக்காகப் பணம் சேகரிப்பதைக் கண்டுபிடிக்க இது போன்ற ‘அதிர்ச்சி’ கேள்விகள் இப்போது ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சுவாரஸ்யமான காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.