ஐபிஎல் 2026 தொடரில் வியாழக்கிழமை நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், லக்னோ அணியின் முகுல் சவுத்ரி யாரும் எதிர்பார்க்காத ஒரு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். 15-வது ஓவரில் ஆயுஷ் பதோனி ஆட்டமிழந்தபோது லக்னோவின் வெற்றி கேள்விக்குறியானது. ஆனால், 27 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் விளாசி முகுல் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

​கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டபோது, வைபவ் வீசிய பந்துகளை இரண்டு மெகா சிக்ஸர்களாக மாற்றி த்ரில் வெற்றி தேடித்தந்தார் முகுல். இந்த வெற்றியால் உணர்ச்சிவசப்பட்ட லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, மைதானத்திற்கே வந்து முகுலை ஆரத்தழுவி நெற்றியில் முத்தமிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். முகுலின் இந்த ஆட்டத்திற்காக அவருக்கு 4.10 கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடிஸ் ஜிஎல்எஸ் (Mercedes GLS) காரை கோயங்கா பரிசளிக்கப்போவதாகத் தகவல்கள் பரவினாலும், அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை வரவில்லை.

இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேசமயம், கேகேஆர் அணி தனது தொடர்ச்சியான மூன்றாவது தோல்வியைப் பதிவு செய்துள்ளது. சிஎஸ்கே மற்றும் கேகேஆர் ஆகிய இரு அணிகளும் இந்த சீசனில் இதுவரை ஒரு வெற்றியைக்கூடப் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.