வானத்தில் உயரே பறக்க வேண்டிய பறவையை, கடலின் ஆழத்திற்கு அழைத்துச் சென்ற ஒரு வினோத சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. தனது செல்லப் பிராணியான ‘பேபே’ என்ற கிளிக்காக, அதன் உரிமையாளர் ஒரு சிறிய நீர்மூழ்கிக் கப்பலையே (Mini-Submarine) உருவாக்கியுள்ளார். பஹாமாஸ் நாட்டின் தெளிவான நீலக் கடலில், ஒரு கண்ணாடி கூண்டுக்குள் அமர்ந்து கிளி கடல் அடியில் பயணிக்கும் இந்த வீடியோ பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தக் கிளி ஏற்கனவே 15 முறை வானில் இருந்து குதிக்கும் ‘ஸ்கைடைவிங்’ செய்த அனுபவம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. கிளிக்கு மூச்சுத்திணறல் ஏற்படாமல் இருக்க ஆக்சிஜன் குழாய்கள் மற்றும் வால்வுகள் கொண்ட ஹை-டெக் வசதிகள் அந்த நீர்மூழ்கியில் செய்யப்பட்டுள்ளன. எனினும், ஒரு பறவையை அதன் இயற்கையான சூழலை விட்டு இப்படி ஆபத்தான சோதனைகளுக்கு உள்ளாக்குவது சரியா என விலங்கு ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது ஒருபுறம் உரிமையாளரின் அன்பையும் திறமையையும் காட்டினாலும், மறுபுறம் இது பறவைக்கு மன அழுத்தத்தை உண்டாக்கும் என இணையத்தில் ஒரு பெரிய விவாதமே கிளம்பியுள்ளது.
