ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியுள்ளதோடு, இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாகத் திறக்க வேண்டும் என்றும், உண்மையான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை ஈரான் முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் தவறும் பட்சத்தில், ஈரானின் நாகரிகமே அழியும் வகையில் மிகக் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அவர் தனது ‘ட்ரூத் சோசியல்’ பக்கத்தில் எச்சரித்துள்ளார். அணு ஆயுதத் தடை மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு உள்ளிட்ட நிபந்தனைகளில் எந்த மாற்றமும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள டிரம்ப், ஒப்பந்தம் நிறைவேற்றப்படாவிட்டால் இதுவரை கண்டிராத அளவிலான வலிமையான இராணுவத் தாக்குதல் தொடங்கப்படும் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்கக் கப்பல்கள், விமானங்கள் மற்றும் வீரர்கள் ஈரானைச் சுற்றியுள்ள பகுதிகளில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், தனது அடுத்த வெற்றிக்காக அமெரிக்க இராணுவம் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டிரம்பின் இந்த எச்சரிக்கை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
