கார்ப்பரேட் உலகில் ‘வேலை-வாழ்க்கை சமநிலை’ குறித்த விவாதங்கள் உலகளவில் அதிகரித்து வரும் நிலையில், தனது திருமண நாளன்று வேலை செய்த ஊழியரைப் பாராட்டிய நிறுவன உரிமையாளருக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த ‘டிரிபிள் வேல்’ (Triple Whale) என்ற நிறுவனத்தின் இணை நிறுவனர் ஏஜே ஓர்பாக் . இவர் தனது நிறுவன ஊழியர் ஒருவருடன் வாட்ஸ்அப்பில் உரையாடிய ஸ்கிரீன்ஷாட்டை எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், ஊழியரின் நலம் குறித்து ஓர்பாக் கேட்க, அதற்கு அந்த ஊழியர், “எல்லாம் நலம். இன்று காலை எனக்குத் திருமணம் முடிந்தது. தற்போது மீண்டும் ஆன்லைனில் வேலைக்குத் திரும்பிவிட்டேன்” என்று பதிலளித்துள்ளார். தனது ஊழியரின் அர்ப்பணிப்பையும், வேலையின் மீதான ஆர்வத்தையும் நெட்டிசன்கள் பாராட்டுவார்கள் என்று எதிர்பார்த்து ஓர்பாக் இதனைப் பதிவிட்டார். ஆனால், விளைவோ தலைகீழாக மாறியது. இந்தப் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் பணி கலாச்சாரம் ‘நச்சுத்தன்மை’ (Toxic Culture) வாய்ந்தது என்று நெட்டிசன்கள் சரமாரியாக விமர்சிக்கத் தொடங்கினர்.

 

“இதுவரை நான் பார்த்த பதிவுகளிலேயே மிகவும் மோசமானது இதுதான். இதைப் பகிர்வதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும்” என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். “சொந்தத் திருமண நாளன்று கூட ஒருவரை வேலை செய்ய வைப்பது மனிதாபிமானமற்றது. இது ஒரு மோசமான முன்னுதாரணம்” என்று மற்றொருவர் சாடியுள்ளார். “மனிதநேயம் செத்துவிட்டதா?” என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எதிர்ப்புகள் வலுத்ததையடுத்து, ஓர்பாக் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், “அந்த ஊழியருக்கு விடுமுறை அங்கீகரிக்கப்பட்டிருந்தது. அவர் தனது சொந்த விருப்பத்தின் பேரில், பொறுப்புணர்வுடன் வேலைக்கு வந்தார். அவரை நான் உடனடியாக வேலையை நிறுத்திவிட்டுச் செல்லுமாறு கூறிவிட்டேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார். இருப்பினும், ஒருவரின் வாழ்நாளில் முக்கியமான தருணமான திருமணத்தன்று கூட வேலைக்கு வரவேண்டும் என்ற மனநிலையை நிறுவனங்கள் உருவாக்குவது ஆரோக்கியமானது அல்ல என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.