ஈரானில் புதைக்கப்பட்டுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைத் தோண்டி எடுப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டு ராணுவ நடவடிக்கையின் போது, சில பகுதிகளில் ‘பி2’ ரக குண்டுகள் மூலம் யுரேனியம் புதைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தற்போது ஈரானுடன் இணைந்து அந்தப் பகுதிகளில் ஆழமாகத் தோண்டி, அந்த யுரேனியத்தை மீட்டெடுப்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், ஈரானில் இனி யுரேனியம் செறிவூட்டும் பணிகள் நடைபெறாது என்றும், கடந்த ஜூன் மாதத்திற்குப் பிறகு ஈரான் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், அடுத்த இரண்டு வாரங்களுக்குப் போர்நிறுத்தம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஈரானை ஒட்டுமொத்தமாக அழிப்போம் என்று எச்சரிக்கை விடுத்திருந்த டிரம்ப், தற்போது தனது நிலைப்பாட்டைச் சற்று மாற்றிக்கொண்டு பேச்சுவார்த்தை மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்.
இந்நிலையில் ஈரானுக்கு உதவும் நாடுகள் மீது 50 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். டிரம்பின் இந்த அதிரடி அறிவிப்புகள் குறித்து ஈரான் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான பதில்கள் எதுவும் வரவில்லை என்றாலும், சர்வதேச அரசியலில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
