அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நடைபெற்று வரும் மோதல்களுக்கு இடையே, ஈரானில் அறிவிக்கப்பட்டுள்ள 14 நாள் போர்நிறுத்தம் தற்காலிக நிம்மதியைத் தந்தாலும், அந்நாட்டின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதலபாதாளத்திற்குச் சென்றுள்ளது. ஏற்கெனவே சர்வதேசத் தடைகளால் முடங்கிக் கிடந்த ஈரான், தற்போதைய போரினால் பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
ஈரானிய நாணயமான ‘ரியால்’ மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. தலைநகர் தெஹ்ரானில் ஒரு பாக்கெட் டோஸ்ட் ரொட்டியின் விலை 7 லட்சம் ரியாலில் இருந்து திடீரென 10 லட்சம் ரியாலாக உயர்ந்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ஒரு பாக்கெட் ரொட்டி வாங்குவதற்கு சுமார் 2000 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. அமெரிக்க டாலர் மதிப்பில் இது வெறும் 0.75 டாலர் என்றாலும், ஈரானிய மக்களுக்கு இது மிகப்பெரிய சுமையாகும். தற்போது ஒரு டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு 13 லட்சத்து 15 ஆயிரத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.
உணவுப் பொருட்களைக் காட்டிலும் மருந்துகளின் விலை உயர்வு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. போர் தொடங்குவதற்கு முன்பு 30 லட்சம் ரியாலாக இருந்த ஒரு புற்றுநோய் மாத்திரையின் விலை, தற்போது 18 கோடி (180 மில்லியன்) ரியாலாக அதிகரித்துள்ளது. புற்றுநோய் நோயாளிகள் ஒவ்வொரு 20 நாட்களுக்கும் ஒருமுறை இவ்வளவு பெரிய தொகையைச் செலவிட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் ஈரான் மத்திய வங்கி திணறி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 50 லட்சம் ரியால் நோட்டுகளை வெளியிட்ட வங்கி, நிலைமை மோசமானதால் மார்ச் மாதத்தில் 1 கோடி (10 மில்லியன்) ரியால் மதிப்பிலான புதிய நோட்டுகளை வெளியிட வேண்டிய சூழல் உருவானது. இது அந்நாட்டின் பணவீக்கம் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது. பிப்ரவரி மாத நிலவரப்படி, ஈரானின் ஆண்டு பணவீக்க விகிதம் 47.5 சதவீதமாக பதிவாகியுள்ளது.
போர் காரணமாகத் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். குறிப்பாகத் கட்டுமானத் துறையில் பெரும் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஈரானின் வங்கித் துறையும் சரிவின் விளிம்பில் உள்ளது. ‘ஆயந்தே’ (Ayandeh Bank) போன்ற பெரிய தனியார் வங்கிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து முடங்கியுள்ளன. கடன்களைத் திரும்பப் பெற முடியாத சூழலில், மத்திய வங்கி மீண்டும் பணத்தைத் அச்சிட வேண்டியிருக்கும் என்றும், இது பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் அதிருப்தியடைந்துள்ள அந்நாட்டு மக்கள், அரசுக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடும் சூழல் உருவாகியுள்ளது.
