ஐக்கிய அரபு அமீரகத்திற்காக (UAE) ஏமன் நாட்டு அரசியல்வாதிகளைக் கூலிப்படை ஏவிக் கொலை செய்ய முயன்றதாக அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்காக அவர் பல கோடி ரூபாய்களை சன்மானமாகப் பெற்றுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஏமன் நாடாளுமன்ற உறுப்பினர் அன்சாஃப் அலி மாயோ என்பவர், அமெரிக்க நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்குத் தொடர்ந்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு தன்னைத் தீர்த்துக்கட்ட அமெரிக்க முன்னாள் வீரர் ஆபிரகாம் கோலன் என்பவரை ஐக்கிய அரபு அமீரகம் கூலிப்படையாகப் பயன்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அமீரகத்தின் அரசியல் எதிரிகளை ஒழிக்கும் ஒரு திட்டமிட்ட நடவடிக்கையின் பகுதியாகவே இது நடந்ததாகத் தெரிகிறது. இதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி, கோலனுக்கு மாதம் 1.5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 12 கோடி ரூபாய்க்கும் மேல்) ஊதியமாக வழங்கப்பட்டதாகவும், வெற்றிகரமான ஒவ்வொரு கொலைக்கும் கூடுதல் ‘போனஸ்’ தொகை வழங்கப்பட்டதாகவும் அந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது.

‘ஸ்பியர் ஆபரேஷன்ஸ் குரூப்’ என்ற அமைப்பின் நிறுவனர் கோலன் மற்றும் அவருடன் பணியாற்றிய கில்மோர், டேல் காம்ஸ்டாக் ஆகிய முன்னாள் வீரர்கள், ஏமனில் இலக்கு வைக்கப்பட்ட கொலைகளைச் செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர்.ஏமனில் ஒரு திட்டமிட்ட கொலைக் குழு செயல்பட்டது. அதை நானே நடத்தினேன். ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒப்புதலுடனேயே இந்தத் தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டன,” என 2018-ல் அளித்த பேட்டி ஒன்றில் கோலன் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை ஐக்கிய அரபு அமீரகம் மறுத்துள்ளது. ஏமனில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமே தாம் ஆதரவு அளிப்பதாகவும், அரசியல் தலைவர்களைத் தனிப்பட்ட முறையில் ஒருபோதும் இலக்கு வைத்ததில்லை என்றும் அமீரகத் தரப்பு தெரிவித்துள்ளது.

ஏமன் நாடாளுமன்ற உறுப்பினர் மாயோ அமெரிக்கர் அல்ல என்ற போதிலும், அந்நாட்டின் ‘ஏலியன் டார்ட் சட்டத்தின்’ (Alien Tort Statute) கீழ் இந்த வழக்கை அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். சர்வதேச சட்டங்கள் மீறப்படும்போது, வெளிநாட்டவர் அமெரிக்க நீதிமன்றங்களை அணுக இச்சட்டம் வழிவகை செய்கிறது. இது குறித்து நீதி மற்றும் பொறுப்புக்கூறல் மையத்தின் (CJA) சட்ட இயக்குனர் டேனியல் மெக்லாக்லின் கூறுகையில், அமெரிக்க ராணுவத்தில் பயிற்சி பெற்ற வீரர்கள், அந்த அனுபவத்தையும் அறிவையும் கொண்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டியது அரசின் கடமையாகும். அவர்கள் தவறு செய்யும்போது சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது அவசியம் என்றார். மேலும் தற்போது இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.