இந்தியாவுடனான அடுத்தகட்ட மோதல் முந்தைய எல்லைகளைத் தாண்டி அமையும் என்றும், இந்தியாவிற்குள்ளேயே புகுந்து ஆர்.எஸ்.எஸ் முகாம்களைத் தாக்குவோம் என்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். சமீபத்தில் ஆவேசமாக உரையாற்றிய கவாஜா ஆசிப் கூறியதாவது, இந்த முறை போர் ஏற்பட்டால் அது வெறும் 200 முதல் 250 கிலோமீட்டர் எல்லைக்குள் மட்டும் இருக்காது. நாங்கள் இந்திய எல்லைக்குள் புகுந்து, அவர்களின் வீடுகளுக்குள்ளேயே சென்று தாக்குதல் நடத்துவோம். இன்ஷா அல்லாஹ், இந்தியா மீண்டும் அத்துமீற முயன்றால், கடந்த ஆண்டை விடப் பெரிய அவமானத்தைச் சந்திக்கும். குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களின் முகாம்களை இலக்கு வைத்துத் தாக்குவோம்.
பாகிஸ்தான் முன்னாள் தூதர் அப்துல் பாசித் ஏற்கனவே இது போன்ற ஒரு மிரட்டலை விடுத்திருந்தார். அமெரிக்கா தங்களைத் தாக்கினால், அதற்குப் பதிலடியாக டெல்லி மற்றும் மும்பை மீது தாக்குதல் நடத்துவோம் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த வியாழக்கிழமை விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்தே, பாகிஸ்தான் தரப்பிலிருந்து இந்த ஆவேசப் பேச்சு வெளியாகியுள்ளது. எல்லையில் பாகிஸ்தான் ஏதேனும் தவறு செய்தால், இந்தியா தரப்பில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ராஜ்நாத் சிங் எச்சரித்திருந்தார்.
சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கவாஜா ஆசிப்பின் இந்தப் பேச்சை ‘உள்நாட்டு அரசியலுக்கான தந்திரம்’ என்றே கருதுகின்றனர். அதாவது ஆப்கான் தலிபான்களுடன் பாகிஸ்தான் தற்போது கடும் மோதலில் ஈடுபட்டுள்ளது. பலுசிஸ்தான், பஞ்சாப் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் நிலவும் மக்கள் போராட்டங்கள் அரசுக்கு நெருக்கடியைக் கொடுத்துள்ளன. பாகிஸ்தானின் கடும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் கடன் சுமை காரணமாக ஒரு முழுமையான போரை நடத்தும் வலிமை அந்த நாட்டிற்கு தற்போது இல்லை.
எனவே, நாட்டில் நிலவும் கடுமையான சவால்களில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இந்தியாவுக்கு எதிராக இத்தகைய ஆவேசமான கருத்துகள் முன்வைக்கப்படுவதாகக் கருதப்படுகிறது. கடந்த 2025 மே மாதம் பகல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய Operation Sindoor மூலம் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதனை மனதில் வைத்தே கவாஜா ஆசிப் தற்போது ‘எல்லைகளைத் தாண்டித் தாக்குவோம்’ என்று குறிப்பிட்டுப் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.
