ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீடித்து வரும் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்கா முன்வைத்த 48 மணிநேர போர் நிறுத்தத் திட்டத்தை ஈரான் அதிரடியாக நிராகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஈரான் வான்பரப்பில் அமெரிக்காவின் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூன்றாம் நாடு ஒன்றின் வாயிலாக அமெரிக்கா தனது போர் நிறுத்தப் பரிந்துரையை ஈரானுக்கு அனுப்பியது. ஆனால், அந்த சமாதானப் பேச்சுவார்த்தையை ஈரான் ஏற்க மறுத்துவிட்டது. இந்தத் தூதரக முயற்சிகள் தோல்வியடைந்த சில மணி நேரங்களிலேயே, இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி ராணுவ மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.

ஈரான் வான் எல்லைக்குள் பறந்த அமெரிக்காவின் அதிநவீன F-15E ஸ்ட்ரைக் ஈகிள் (F-15E Strike Eagle) மற்றும் A-10 வோர்தாக் (A-10 Warthog) ஆகிய போர் விமானங்கள் தாக்கி அழிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுட்டு வீழ்த்தப்பட்ட F-15E விமானத்தில் இருந்த ஒரு வீரர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், மற்றொரு வீரரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஈரானின் அரசு ஊடகமான IRIB, அமெரிக்க விமானத்தின் வால் பகுதி உள்ளிட்ட சிதைந்த பாகங்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இவை இங்கிலாந்தின் லேக்கன்ஹீத் (RAF Lakenheath) தளத்தைச் சேர்ந்த 494-வது போர் விமானப்பிரிவைச் சேர்ந்தவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈரானின் குசெஸ்தான்  மாகாணத்தில் விமானத்தின் சிதைந்த பாகங்கள் விழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தப் பகுதியில் அமெரிக்க ஹெலிகாப்டர்கள் மற்றும் மீட்பு விமானங்கள் தாழ்வாகப் பறக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. தற்போதைய மோதல் சூழலில், ஈரான் மண்ணில் அமெரிக்கப் போர் விமானங்கள் வீழ்வது இதுவே முதல் முறையாகும்.

இந்தச் சம்பவம் குறித்து ஈரானிய ஊடகங்கள் விரிவான வரைபடங்களுடன் செய்திகளை வெளியிட்டு வரும் நிலையில், அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனோ அல்லது வெள்ளை மாளிகையோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. விமானிகளின் நிலை மற்றும் விபத்து நடந்த விதம் குறித்து அமெரிக்கா மவுனம் காப்பது மர்மத்தை நீடிக்கச் செய்துள்ளது.