உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்ட எஸ்பி-யாகப் பணியாற்றிய வித்யாசாகர் மிஸ்ரா, சமீபத்தில் வேறு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பொதுவாக அதிகாரிகள் மாறும்போது சம்பிரதாயமாக வழியனுப்புவது வழக்கம். ஆனால், இங்கு எஸ்பி வித்யாசாகர் மிஸ்ரா விடைபெற்றபோது, அவருக்குக் கீழ் பணியாற்றிய காவலர்கள், குறிப்பாக பெண் காவலர்கள், தங்கள் குடும்பத்தில் ஒருவரைப் பிரிவது போல கதறி அழுதது காண்போரை கண் கலங்க வைத்துள்ளது.
காவல்துறையினர் என்றாலே கடுமையானவர்கள் என்ற பொதுப் பிம்பத்தை உடைக்கும் வகையில், இந்த அதிகாரி தனது ஊழியர்களிடம் காட்டிய உண்மையான பாசமே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. சக ஊழியர்கள் கண்ணீர் மல்க அவருக்கு வழியனுப்பு விழா நடத்திய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. “பதவிக்காக அல்ல, பண்பிற்காக அழுத கண்ணீர் இது” என நெட்டிசன்கள் இந்த அதிகாரியைப் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
