தாய்லாந்தில் உள்ள வஜிராலோங்கோர்ன் (Vajiralongkorn) அணைக்கட்டின் நீர்மட்டம் கணிசமாகக் குறைந்துள்ளதை அடுத்து, கடந்த 42 ஆண்டுகளாக தண்ணீருக்கு அடியில் மூழ்கியிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ‘சயாம் மரண ரயில் நிலையம் மீண்டும் வெளியே தெரிந்து உலகளவில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது, ஜப்பானியப் படைகளால் தாய்லாந்தையும் மியான்மரையும் (அப்போதைய பர்மா) இணைப்பதற்காக இந்த ரயில் பாதை மிகக் குறுகிய காலத்தில் ஆபத்தான மலைப்பகுதிகளில் உருவாக்கப்பட்டது. காடுகளை அழித்து, பாறைகளைக் குடைந்து இந்த ரயில் பாதையை அமைக்கும் கொடூரமான பணியில் லட்சக்கணக்கான ஆசியத் தொழிலாளர்களும், போர்க் கைதிகளும் ஈடுபடுத்தப்பட்டனர்.
அடிமைத்தனம், ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் கடுமையான நோய்த்தொற்றுகள் காரணமாக சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் இந்தப் பாதையை அமைக்கும் பணியின்போது கொடூரமாக உயிரிழந்ததால், இது ‘மரண ரயில் பாதை’ (Death Railway) என்று அழைக்கப்படுகிறது. பின்னர், 1984-ஆம் ஆண்டில் இப்பகுதியில் அணை கட்டப்பட்டபோது இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ரயில் நிலையமும், அதைச் சுற்றியிருந்த கிராமங்களும் முற்றிலுமாக தண்ணீருக்குள் மூழ்கின. தற்போது வறட்சி மற்றும் அணை நீர் திறப்பு காரணமாக, 42 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வரலாற்றுச் சின்னம் மீண்டும் தரைமட்டத்தில் வெளியே தெரியத் தொடங்கியுள்ளது. இதைக் காண்பதற்காகப் வரலாற்று ஆய்வாளர்களும், சுற்றுலாப் பயணிகளும் தற்போது அப்பகுதிக்குத் திரண்டு வருவதால் சர்வதேச அளவில் இது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
