புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஏப்ரல் 5-ஆம் தேதி மேற்கொள்ளவிருந்த பிரம்மாண்டப் பரப்புரைக்குக் கடும் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. அக்கட்சியின் சார்பில் புதுச்சேரி முழுவதும் 23 முக்கிய இடங்களில் பரப்புரை செய்ய அனுமதி கோரப்பட்டிருந்தது.

ஆனால், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி ராஜீவ்காந்தி சதுக்கம், மறைமலை அடிகள் சாலை, தவளகுப்பம் மற்றும் வில்லியனூர் ஆகிய 4 இடங்களுக்கு மட்டுமே தேர்தல் ஆணையம் தற்போது அனுமதி வழங்கியுள்ளது மீதமுள்ள 19 இடங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது தவெக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

​அனுமதி மறுக்கப்பட்டதால் சோர்ந்துவிடாத விஜய், தனது அடுத்தகட்ட அதிரடித் திட்டத்தை வகுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 19 இடங்களில் மக்கள் மத்தியில் நேரடியாகப் பேச முடியாவிட்டாலும், தங்கியிருக்கும் இடத்தில் இருந்தபடியே டிஜிட்டல் தொழில்நுட்பம் வாயிலாகவோ அல்லது மாற்று வழிகளிலோ தனது பரப்புரையை முன்னெடுக்க அவர் ஆலோசித்து வருகிறார். புதுச்சேரி அரசியல் களத்தில் விஜய்யின் வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த அனுமதி மறுப்பு விவகாரம் தவெக மற்றும் பிற அரசியல் கட்சிகளிடையே பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.