தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் லால்குடி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் இந்திய ஜனநாயகப் புலி கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் இன்று கல்லக்குடி பகுதியில் வினோதமான முறையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
லால்குடி தொகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அவர் இன்று திடீரென கல்லக்குடி இரயில் நிலையத்திற்கு அருகே உள்ள தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்து நூதன முறையில் பரப்புரை செய்தார்.
இதனைப் பார்த்த பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் அதிர்ச்சியடைந்து அவரைத் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். மன்சூர் அலிகானின் இந்தத் திடீர் செயலால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.
இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான் கடந்த ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்தி மூன்றாம் ஆண்டு நடைபெற்ற புகழ்பெற்ற கல்லக்குடி இரயில் மறியல் போராட்டமும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவும் தமக்கு வந்ததால் இவ்வாறு தண்டவாளத்தில் படுத்ததாகத் தெரிவித்தார்.
டால்மியாபுரம் இரயில் நிலையத்தின் பெயரை மாற்றக்கோரி அன்று நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்கப் போராட்டத்தை நினைவு கூரும் வகையில் இந்தச் செயலில் ஈடுபட்டதாக அவர் விளக்கம் அளித்தார். தேர்தல் நேரத்தில் வாக்குகளைக் கவர்வதற்காகத் திரைத்துறையைச் சேர்ந்த மன்சூர் அலிகான் மேற்கொண்ட இந்த வினோதப் பிரச்சாரம் தற்பொழுது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
