அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய வான்வழித் தாக்குதலில் அந்நாட்டின் முக்கியத் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. இதன் எதிரொலியாக, உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் மிக முக்கியமான ‘ஹார்முஸ் ஜலசந்தி’ பகுதியை ஈரான் தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.

இந்த வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு இனி ‘சுங்கக் கட்டணம்’ வசூலிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இரண்டு கப்பல்கள் பணம் செலுத்திப் பயணத்தைத் தொடர்ந்துள்ள நிலையில், சுமார் 2,000 கப்பல்கள் அந்தப் பகுதியில் சிக்கியுள்ளதால் உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

இந்த ஹார்முஸ் நீர்வழிப்பாதையை ஈரான் ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது. அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகே கப்பல்கள் அனுமதிக்கப்பட்டு வரும் சூழலில், இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 40 சதவீதமும், சமையல் எரிவாயு தேவையில் 90 சதவீதமும் இந்த வழியாகவே கொண்டு வரப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஈரானின் இந்த அதிரடி நடவடிக்கையால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்புள்ளதோடு, இந்தியாவிலும் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.