ஈரான் போரில் தமக்கு போதிய ஒத்துழைப்பு வழங்காத பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற நட்பு நாடுகளை அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி நெருக்கடியால் விமான எரிபொருள் தட்டுப்பாட்டைச் சந்திக்கும் நாடுகள், அமெரிக்காவிடமே அதைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும், இனி தங்கள் பாதுகாப்பிற்கு அமெரிக்காவை மட்டும் நம்பியிருக்கக் கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
குறிப்பாக, இஸ்ரேலுக்குச் செல்லும் அமெரிக்க போர் விமானங்கள் தனது வான்வெளியைப் பயன்படுத்த பிரான்ஸ் அனுமதி மறுத்ததை “மோசமான நடத்தை” எனக் குறிப்பிட்ட டிரம்ப், இதை அமெரிக்கா ஒருபோதும் மறக்காது என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
ஈரான் ஏற்கனவே பலவீனமடைந்துவிட்டதாகவும், போரின் கடினமான பகுதி முடிந்துவிட்டதாகவும் கூறியுள்ள டிரம்ப், இனி நட்பு நாடுகள் தங்களின் சொந்தத் தேவைகளையும் பாதுகாப்பையும் தாங்களே கவனித்துக்கொள்ள வேண்டும் எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
இந்தப் போரில் இதுவரை 13 அமெரிக்க வீரர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், தன்னிடம் துணை நிற்க மறுத்த நாடுகளிடமிருந்து அமெரிக்கா தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளக்கூடும் என்பதையே டிரம்பின் இந்த அறிக்கை உணர்த்துகிறது.
“நீங்களாகப் போராடக் கற்றுக்கொள்ளுங்கள், அமெரிக்கா எப்போதும் உங்களுடன் இருக்காது” என்ற அவரது பேச்சு சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
