கவுகாத்தியில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியின் போது சென்னை அணியின் முன்னாள் வீரர் ரவீந்திர ஜடேஜா மைதானத்தில் உணர்ச்சிவசப்பட்டுக் கண்கலங்கிய சம்பவம் ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட காலம் சென்னை அணியின் தூணாக விளங்கிய ஜடேஜா தற்பொழுது ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் நிலையில் பழைய நினைவுகளால் அவர் எமோஷனலாகி அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போட்டிக்குப் பின்னர் இது குறித்துப் பேசிய அவர் சென்னை அணியுடனான சுமார் 12 முதல் 13 ஆண்டுகாலப் பயணம் முடிவுக்கு வந்தது தமக்கு மிகுந்த மனவேதனையை அளித்ததாகத் தெரிவித்தார்.
இருப்பினும் மாற்றங்கள் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டதாகக் கூறிய ஜடேஜா தான் முதன்முதலில் கோப்பை வென்ற ராஜஸ்தான் அணிக்கே மீண்டும் திரும்பியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.
சென்னை அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் ராஜஸ்தான் வீரராகக் களமிறங்கிய ஜடேஜா மூன்று ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றித் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனது பழைய அணிக்குத் திரும்பியுள்ள ஜடேஜாவின் இந்தச் செயல் மற்றும் உருக்கமான பேச்சு கிரிக்கெட் வட்டாரத்தில் தற்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளது.
