“பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு” என்பார்கள். ஆனால், தன் பிள்ளைக்காக ஒரு தாய் எமனையே எதிர்த்து நின்ற சம்பவம் மகாராஷ்டிராவின் ஜிந்தூர் பகுதியில் அரங்கேறியுள்ளது. மோனாலி ரவி ஜாதவ் என்ற பெண்மணி, தனது இரண்டு வயது மகள் ரேணுகாவுடன் வீட்டின் பின்புறம் சென்றுள்ளார். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், ஒரு ராட்சத விஷ நாகம் சீறிக்கொண்டு அந்தச் சிறுமியின் காலடியில் வந்து நின்றது. ஒரு நொடி தாமதித்தாலும் அந்த விஷப்பாம்பு குழந்தையைத் தீண்டியிருக்கும். ஆனால், அந்தத் தாய் எதற்கும் அஞ்சாமல் விஸ்வரூபம் எடுத்தார்.

​தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல், சீறிக்கொண்டிருந்த அந்தப் பாம்பின் மேலேயே எகிறி குதித்த மோனாலி, மின்னல் வேகத்தில் தனது மகளைக் கவ்விப் பிடித்து அள்ளி அணைத்துக்கொண்டார். அந்தத் தாயின் அசாத்திய தைரியத்தைக் கண்டு அங்கிருந்தவர்களே மிரண்டு போனார்கள். தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் அந்தப் பாம்பைப் பிடித்து காட்டிற்குள் விட்டனர். “பிள்ளைக்காகத் தாய் புலியாக மாறுவாள்” என்பதை நிரூபித்த மோனாலிக்கு இப்போது சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிகிறது.