கடந்த பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்தி வரும் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் கடும் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதற்குப் பதிலடியாக ஈரானும் அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால், உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்தப் போரை அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே முடிக்க வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அமெரிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப், ஈரான் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், அதன் மூலம் தற்போது போர் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அதிரடியாக அறிவித்துள்ளார்.
மத்திய கிழக்கைக் கைப்பற்ற முயன்ற ஈரானிய ஆட்சியாளர்களின் கையில் அணு ஆயுதம் இருக்கக்கூடாது என்று குறிப்பிட்ட அவர், போரின் போது நேட்டோ நாடுகள் உதவாதது குறித்துத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்பில் இருந்து முரண்பட்ட தகவல்கள் வந்தாலும், டிரம்பின் இந்த அறிவிப்பு போர் நிறுத்தத்திற்கான ஒரு முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
