மத்திய கிழக்கில் ஈரான் – இஸ்ரேல் இடையே நீடித்து வரும் போர் உலக நாடுகளை எரிசக்தி நெருக்கடியில் தள்ளியுள்ள நிலையில், இந்த இக்கட்டான சூழலையும் ஈரான் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருவது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஈரான், அதன் வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு அனுமதி வழங்கப் பெருமளவிலான கட்டணத்தை வசூலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்தின் (GCC) பொதுச் செயலாளர் அளித்துள்ள தகவலின்படி, போரினால் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளைச் சமாளிக்க, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதாகக் கூறி கப்பல்களிடமிருந்து ஈரான் ‘வசூல் வேட்டை’ நடத்தி வருகிறது.

இருப்பினும், இந்தியாவிற்கு ஒரு நிம்மதி தரும் செய்தியாக, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து இந்தியாவையும் தனது ‘நட்பு நாடுகள்’ பட்டியலில் ஈரான் சேர்த்துள்ளது. இதன் மூலம் இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கப்பல்கள் எவ்வித தடையுமின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க ஈரான் பச்சைக்கொடி காட்டியுள்ளது.

அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவை ஈரான் அதிரடியாக நிராகரித்துள்ள சூழலில், தனது நட்பு நாடுகளுக்கு மட்டும் கடல்வழியைத் திறந்துவிட்டு, மற்ற நாடுகளிடம் கட்டணம் வசூலிக்கும் ஈரானின் இந்த ராஜதந்திரம் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்ய இந்த முடிவு ஒரு ‘கேம் சேஞ்சராக’ இருக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
