கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் 6 இடங்களில் போட்டியிட்ட த.மா.கா அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியது. இந்த முறை கூடுதல் இடங்களை ஜி.கே.வாசன் எதிர்பார்த்த நிலையில், கடந்த காலத் தோல்விகளைக் காரணம் காட்டி அ.தி.மு.க தலைமை வெறும் 5 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியுள்ளது.
ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, ஒட்டன்சத்திரம், கும்பகோணம் மற்றும் கிள்ளியூர் ஆகியவையே அந்தத் தொகுதிகள் ஆகும்m இந்த 5 தொகுதிகளிலும் த.மா.கா வேட்பாளர்கள் சந்திக்கப்போகும் எதிராளிகள் மிகவும் பலமானவர்கள் என்பது தான் அக்கட்சியினருக்குப் பெரும் கவலையாக உள்ளது. இதில் முத்துசாமி, காந்தி மற்றும் சக்கரபாணி என மூன்று அமைச்சர்களை எதிர்த்து த.மா.கா களம் காண வேண்டும்.
மற்ற இரு தொகுதிகளில் செல்வாக்குமிக்க சாக்கோட்டை அன்பழகன் மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோர் எம்.எல்.ஏ-க்களாக உள்ளனர். நீண்ட காலமாக தி.மு.க மற்றும் காங்கிரஸ் கோட்டையாக விளங்கும் இந்தத் தொகுதிகளில் வெற்றி பெறுவது த.மா.கா-வுக்கு ஒரு அக்னி பரீட்சையாகவே அமையும். இந்தத் தொகுதிப் பங்கீடு த.மா.கா-வினருக்கு மட்டுமன்றி அ.தி.மு.க தொண்டர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தனை சவாலான தொகுதிகளில் அ.தி.மு.க நேரடியாகப் போட்டியிட்டால் தான் தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்று அவர்கள் கருதுகின்றனர். பலவீனமான கூட்டணிக் கட்சிக்கு இந்த இடங்களை ஒதுக்கியதன் மூலம், தி.மு.க-வின் வெற்றியை அ.தி.மு.க தலைமையே எளிதாக்கி விட்டதாகக் கட்சி நிர்வாகிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
