சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார். பாஜகவின் ‘ஸ்கிரிப்ட்’ படி செயல்படும் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியை விமர்சிக்கத் தகுதி இல்லை என்றும், ஜெயலலிதாவின் கொள்கைகளுக்கு எதிராக அவர் பாஜகவிடம் அடிபணிந்து போவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்படும் என எச்சரித்த அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகச் சிறப்பாக இருப்பதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்களே கூறுவதாகவும் குறிப்பிட்டார்.மேலும், திமுக கூட்டணியில் குழப்பம் விளைவிக்க முயற்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுத்த அமைச்சர், முதல்வர் ஸ்டாலின் மக்களை நேரடியாகச் சந்தித்து குறைகளைக் கேட்டு வருவதைச் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் துரைமுருகன் குறித்து வேல்முருகன் முன்வைத்த புகார்கள் தவறானவை என்றும், தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே அவர் இவ்வாறு பேசுவதாகவும் கூறினார்.

திமுக கூட்டணி ஒரு மனமொத்த கூட்டணி என்றும், 2026 சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் திமுகவே ஆட்சி அமைக்கும் என்றும் அமைச்சர் சிவசங்கர் நம்பிக்கை தெரிவித்தார்.