தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மாநிலம் தழுவிய தீவிரப் பிரச்சாரத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காகத் தேர்தல் ஆணையத்திடம் முறையான அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், சென்னை பெரம்பூரில் இருந்து அவர் தனது வாகனப் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்குகிறார்.

மேலும் முதற்கட்டமாக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர் மற்றும் விருகம்பாக்கம் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் ஒரே நாளில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த எழுச்சிமிக்கப் பிரச்சாரப் பயணத்தில் விஜய்யுடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நட்சத்திரப் பேச்சாளர்களும் பங்கேற்க அனுமதி பெறப்பட்டுள்ளது.

இதனால் ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இதற்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பிரம்மாண்டமான முன்னேற்பாடுகள் தற்போதே முடுக்கிவிடப்பட்டுள்ளன. த.வெ.க-வின் இந்த அதிரடி தேர்தல் களம், தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என அக்கட்சியினர் மிகுந்த உற்சாகத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.