மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே ஏற்கனவே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், தற்போது இஸ்ரேல் நடத்தியுள்ள ஒரு அதிரடித் தாக்குதல் உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.

ஈரான் கடற்படையின் முக்கிய தளபதி ஒருவரை, இஸ்ரேல் விமானப்படை ஏவுகணை மூலம் தாக்கி அழித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காஸ்பியன் கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஈரானிய கடற்படை கப்பல்கள் மற்றும் ஒரு முக்கிய போர்க்கப்பலைக் குறிவைத்து இஸ்ரேல் இந்த ரகசியத் தாக்குதலை நடத்தியுள்ளது.

‘ஆபரேஷன் ரோரிங் லயன்’ (Operation Roaring Lion) என்ற பெயரில் இஸ்ரேல் நடத்தி வரும் இந்த வேட்டையில், ஈரானின் நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணைகள் கொண்ட கப்பல்கள் மற்றும் ஒரு துறைமுக கட்டுப்பாட்டு மையமும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதலில் ஈரானின் மூத்த கடற்படை தளபதி கொல்லப்பட்டதை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது. ஏற்கனவே ஈரானின் உச்ச தலைவர் உள்ளிட்ட முக்கிய ராணுவத் தலைவர்கள் ஒருவர்பின் ஒருவராக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டு வரும் நிலையில், கடற்படை தளபதியின் இந்த இழப்பு ஈரானுக்கு ஈடு செய்ய முடியாத ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இதற்குப் பழிதீர்க்கும் விதமாக ஈரான் ஏதேனும் பெரிய ராணுவ நடவடிக்கையில் ஈடுபடுமா அல்லது சர்வதேச நாடுகள் தலையிட்டு இந்தப் போரை நிறுத்துமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.