தேனி மாவட்டம் போடியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், வரவிருக்கும் தேர்தலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டால் தாம் போட்டியிடத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். தற்பொழுது திமுகவில் ஒரு தொண்டனாக இணைந்திருப்பதாகக் குறிப்பிட்டள்ளார்.
மேலும் முதலமைச்சர் அறிவிக்கும் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறுபவர்கள் அனைவரும் தகுதியானவர்கள் என்றும், தென் மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளிலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இதனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த ஓபிஎஸ், அவர் ஒரு ஆளுமைமிக்க தலைவர் அல்ல என்றும், 2017 ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முதல் 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை தொடர் தோல்விகளைச் சந்தித்தவர் என்றும் சாடினார்.
இந்நிலையில் இபிஎஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கை பொய்யானது எனக் குறிப்பிட்ட அவர், அதிமுக கூட்டணியில் உள்ளவர்கள் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம் டெல்லி சொல்வதையே இபிஎஸ் கேட்கிறார் என்பது தெளிவாகிறது என்றும் குற்றம் சாட்டினார்.
