திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயசீலன் என்பவரது மகன் புகழேந்தி. இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சமீபத்தில் தனது ஊர் இளைஞர்களுடன் புகழேந்தி உற்சாகமாகக் கபடி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் கீழே விழுந்ததில், அவரது வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.‌ உடனடியாக அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், புகழேந்தியின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்தனர். மேலும், இதற்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறி, அவரை உள்நோயாளியாக அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தற்போது 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து வரும் நிலையில், நேற்று நடைபெற இருந்த மிக முக்கியமான கணிதத் தேர்வை எழுத முடியாமல் புகழேந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கபடி விளையாட்டில் ஏற்பட்ட இந்த விபத்தால், ஓராண்டு உழைப்பு வீணாகித் தேர்வை எழுத முடியாமல் போனது அந்த மாணவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.