கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஒரு தனியார் உணவகம், வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் தருபவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தினமும் இலவசமாக சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக வணிக சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதனால் உணவகங்களை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், ஓசூர் தளி சாலையில் உள்ள இந்த ஹோட்டல் நிர்வாகம் தனது கடையின் முன்பு இது தொடர்பான விளம்பரப் பலகையை வைத்து வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது.

இந்த நூதன அறிவிப்பின்படி, ஒரு வணிக சிலிண்டர் தருபவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தினமும் ஒரு சிக்கன் பிரியாணியும், இரண்டு சிலிண்டர்கள் தருபவர்களுக்கு தினமும் இரண்டு சிக்கன் பிரியாணிகளும் இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எரிவாயு தட்டுப்பாட்டால் உணவுகளின் விலை உயர்ந்து வரும் சூழலில், ஹோட்டல் நிர்வாகத்தின் இந்த வித்தியாசமான முயற்சி மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஏற்கனவே சிலர் சிலிண்டர்களை வழங்கி, தினமும் தங்களது இலவச பிரியாணியைப் பெற்றுச் செல்வதாக ஹோட்டல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.