விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு ஹர்ஷினி, கயல் என இரண்டு மகள்கள் இருந்தனர். கடந்த 14-ஆம் தேதி அங்காளம்மன் கோவில் திருவிழாவிற்குச் சென்ற இந்தச் சிறுமிகள் இருவரும், அங்கிருந்த குளத்தில் தாமரைப்பூ பறிக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஒரே நேரத்தில் தனது இரண்டு மகள்களையும் பறிகொடுத்த தாய் ஜெயந்தி, அந்தத் துயரம் தாளாமல் கடந்த சில நாட்களாகக் கடும் மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.
மகள்களின் நினைவாகவே அழுதுகொண்டிருந்த ஜெயந்திக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர். இந்நிலையில்,  வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜெயந்தி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

வயலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய அய்யனார், தனது மனைவி தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. இரண்டு மகள்கள் இறந்த சோகம் மறைவதற்குள் தாயும் உயிரிழந்த இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.