அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் பதற்றத்தால் உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் வணிக ரீதியிலான கேஸ் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இது ஓட்டல்கள் மற்றும் டீக்கடைகளை மட்டும் பாதிக்காமல், திருநெல்வேலியின் அடையாளமான ‘அல்வா’ தயாரிப்பையும் விட்டுவைக்கவில்லை.
நெல்லை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக வணிக சிலிண்டர் விநியோகம் முடங்கியுள்ளதால், இனிப்பு தயாரிப்பு நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. குறிப்பாக, நெல்லை சந்திப்பில் உள்ள உலகப்புகழ் பெற்ற ‘சாந்தி ஸ்வீட்ஸ்’ நிறுவனத்தில் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அல்வா மற்றும் கார வகைகளின் தயாரிப்பு வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
தற்போது கையிருப்பில் இருந்த கேஸ் முழுவதும் தீர்ந்துவிட்டதால், நேற்று முதல் அல்வா தயாரிப்பைத் தற்காலிகமாக நிறுத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நேற்று வரை மட்டுமே விற்பனைக்குத் தேவையான அல்வா கையிருப்பில் இருந்த நிலையில், இன்று முதல் அல்வா கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தத் தகவல் நெல்லை அல்வா பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
