பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீர், “ஈரான் மீது அதிக பாசம் உள்ளவர்கள் அந்த நாட்டுக்கே சென்றுவிடலாம்” என்று கூறிய கருத்து அந்நாட்டு ஷியா முஸ்லிம்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஷியா மதகுருமார்கள், “உங்களுக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மீது அவ்வளவு விருப்பம் இருந்தால், நீங்கள் அந்த நாடுகளுக்கே சென்றுவிடுங்கள்” என்று மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு எதிராக பாகிஸ்தானில் நடந்த போராட்டங்களை ராணுவம் ஒடுக்கியதோடு, அதில் 35 பேர் கொல்லப்பட்ட நிலையில், ராணுவ தளபதியின் இந்த பேச்சு எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல் அமைந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் சொற்கேட்டு பாகிஸ்தான் ராணுவம் செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ள ஷியா அமைப்புகள், தங்களை அந்நியர்களாகச் சித்தரிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கில்கிட்-பால்டிஸ்தான் மற்றும் இஸ்லாமாபாத் பகுதிகளில் ராணுவ தளபதிக்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
அசிம் முனீர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையெனில் இந்த விவகாரம் உள்நாட்டுப் போர் போன்ற ஒரு மோசமான சூழலுக்கு வழிவகுக்கும் என்றும் மதகுருமார்கள் எச்சரித்துள்ளனர்.
