உலக நாடுகளின் கவனம் ஈரான் போர் மீது இருக்கும் வேளையில், உக்ரைன் ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான ‘பிரிமோர்ஸ்க்’ மீது டிரோன் தாக்குதல் நடத்தி அதிரடி காட்டியுள்ளது. பால்டிக் கடலில் அமைந்துள்ள இந்த முனையத்தில் சுமார் 249 டிரோன்களைப் பயன்படுத்தி உக்ரைன் நடத்திய இந்தத் தாக்குதலால், அங்கிருந்த எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் தீப்பிடித்து எரிகின்றன.
தினசரி 15 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் கையாளப்படும் இந்த முனையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ரஷ்யாவிலிருந்து சூயஸ் கால்வாய் வழியாக இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய்க்கு இது ஒரு முக்கிய ஆதாரமாக இருப்பதால், இந்தத் தாக்குதல் இந்தியாவிற்கு கவலை அளிப்பதாக உள்ளது.
ஏற்கனவே ஈரான் ‘ஹோர்முஸ்’ ஜலசந்தியை மூடியுள்ளதால் உலகளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ரஷ்யாவின் இந்த எண்ணெய் முனையமும் முடங்கியுள்ளது பெரும் எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு விடுத்த எச்சரிக்கைக்கு நடுவே, ரஷ்யாவின் இந்த எண்ணெய் முனையம் தாக்கப்பட்டது உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையை மேலும் உயர்த்தும் என அஞ்சப்படுகிறது.
சவூதி அரேபியா போன்ற நாடுகளும் மாற்று வழிகளைத் தேடி வரும் நிலையில், ஒரே நேரத்தில் உலகின் இரண்டு முக்கிய எண்ணெய் விநியோகப் பாதைகள் முடங்கியிருப்பது சர்வதேச பொருளாதாரத்திற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
