அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுடனான போரை ஐந்து நாட்களுக்குத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக (Ceasefire) அறிவித்துள்ள போதிலும், ஈரான் அதனை ஏற்க மறுத்து “தலைக்குத் தலை”  எனப் பயங்கரமான எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்டதால் கடும் ஆத்திரத்தில் இருக்கும் ஈரான், அமெரிக்காவுடனான 24 நாள் பதற்றத்திற்குப் பிறகு எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தத் தயாராக இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஈரானிய ராணுவ ஆலோசகர் மொஹ்சென் ரெஸாயி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இனி பின்வாங்குவதற்கு வழியில்லை; எங்களின் அனைத்து நிபந்தனைகளும் நிறைவேற்றப்படும் வரை போர் தொடரும்” என முழங்கியுள்ளார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அழுத்தத்தாலேயே அமெரிக்கா இந்தப் போரைத் தொடர்ந்ததாகக் குற்றம் சாட்டியுள்ள ஈரான், தற்போது அமெரிக்கா பின்வாங்க நினைப்பதை அனுமதிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளது.

“>

ஈரானின் இந்த ஆவேசமான முடிவுக்குப் பின்னால் சில முக்கிய நிபந்தனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. போரினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும், ஈரானின் மீதான அனைத்துப் பொருளாதாரத் தடைகளும் நீக்கப்பட வேண்டும் மற்றும் எதிர்காலத்தில் ஈரானின் உள்விவகாரங்களில் தலையிட மாட்டோம் எனச் சர்வதேச அளவில் அமெரிக்கா உத்தரவாதம் அளிக்க வேண்டும் என ரெஸாயி வலியுறுத்தியுள்ளார்.

“இந்த முறை எங்களின் பதிலடி கண்ணுக்குக் கண்ணாக இருக்காது, மாறாகத் தலைக்குத் தலையாக இருக்கும்” என அவர் கூறியுள்ளது வளைகுடா நாடுகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா தனது தோல்வியை உணர்ந்து சமாதானப் பிரகடனம் செய்தாலும், ஈரானின் பிடிவாதமான இந்த நிலைப்பாடு மத்திய கிழக்கில் அமைதி திரும்புவதை மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது.