அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுடன் “ஒப்பந்தம்” செய்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்த போதிலும், ஈரான் தரப்பிலிருந்து எவ்வித சமரசமும் இன்றி மிகக் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஈரானிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் மூத்த ராணுவ ஆலோசகர் மொஹ்சென் ரெசாய், திங்களன்று தொலைக்காட்சியில் ஆற்றிய உரையில், “எங்களுக்கு ஏற்பட்ட அனைத்து இழப்புகளுக்கும் உரிய இழப்பீடு, அனைத்துப் பொருளாதாரத் தடைகள் நீக்கம் மற்றும் அமெரிக்கத் தலையீட்டிற்கு எதிரான சர்வதேச சட்டப்பூர்வ உத்தரவாதங்கள் கிடைக்கும் வரை போர் ஓயாது” என அதிரடியாக முழங்கியுள்ளார்.

ஒரு வாரத்திற்கு முன்பே அமெரிக்கா போரை நிறுத்தத் தயாராக இருந்ததாகவும், ஆனால் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொடுத்த அழுத்தத்தாலேயே சண்டை நீட்டிக்கப்பட்டதாகவும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

“>

இந்த மோதல் இனி சாதாரணமான பதிலடித் தர்க்கத்தைப் பின்பற்றாது என்று எச்சரித்த ரெசாய், “இந்த முறை கண்ணுக்குக் கண் அல்ல, தலைக்குக் கண் தான் (Head for an eye)” எனப் பயங்கரமான தொனியில் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், எதிரிப் படைகள் வளைகுடா பிராந்தியத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும், ஈரானிய ஆயுதப் படைகள் முழு வலிமையுடன் தங்களது நடவடிக்கைகளைத் தொடரும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் பெயர் குறிப்பிடப்படாத ஒரு ஈரானியத் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக டிரம்ப் கூறியுள்ள போதிலும், ஈரான் தரப்பு போரை நிறுத்துவதற்கான எந்தவொரு சமிக்ஞையையும் இதுவரை வெளிப்படுத்தவில்லை.

ஈரானின் இந்த பிடிவாதமான நிலைப்பாடு மத்திய கிழக்கில் அமைதி திரும்புவதை மீண்டும் ஒரு கேள்விக்குறியாக மாற்றியுள்ளது.