ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு சற்றும் எதிர்பார்க்காத வகையில் வடகொரியாவிடமிருந்து ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தல் வந்துள்ளது.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தனது நாட்டின் அணுசக்திக் கொள்கை “மாற்ற முடியாதது” என்றும், அணு ஆயுதப் படைகளின் பலம் மேலும் அதிகரிக்கப்படும் என்றும் நாடாளுமன்றத்தில் அதிரடியாக முழங்கியுள்ளார். குறிப்பாக, 2026-ம் ஆண்டிற்கான பாதுகாப்புச் செலவினங்களை 15.8 சதவீதம் உயர்த்தியுள்ள கிம் ஜாங் உன், அமெரிக்காவை நேரடியாக வம்புக்கு இழுக்கும் வகையில் ஒரு சவாலையும் விடுத்துள்ளார்.

இந்தப் போரின்போது வடகொரியக் குடிமகன் எவருக்காவது பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு டிரம்பும் அமெரிக்காவுமே பொறுப்பேற்க வேண்டும் என்றும், அதன் விளைவுகள் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஏற்கனவே ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்டதால் வளைகுடா பிராந்தியமே கொந்தளிப்பில் உள்ளது. இந்தச் சூழலில், ஈரானின் பிடிவாதமான போர்க்குணமும், மறுபுறம் வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலும் டிரம்ப் நிர்வாகத்தை நிலைகுலையச் செய்துள்ளது.

தென் கொரியாவைத் தனது மிகப்பெரிய எதிரி என அறிவித்துள்ள கிம் ஜாங் உன், ஈரானுக்கு ஆதரவாகத் திரும்புவது போன்ற சமிக்ஞைகளை வெளிப்படுத்துவது அமெரிக்காவிற்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. டிரம்பின் போர் முடிவுகள் சர்வதேச அளவில் அமெரிக்காவைத் தனிமைப்படுத்தி வருவதுடன், அணு ஆயுதப் போர் மூளும் அபாயத்தையும் அதிகரித்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.