கடந்த 24 நாட்களாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீடித்து வந்த போர் பதற்றம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் திடீர் அறிவிப்பால் தற்காலிகமாகத் தணிந்துள்ளது. ஈரானின் மின்சார மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல்களை அடுத்த ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைக்குமாறு அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளின் விளைவாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இருப்பினும், ஈரானின் கடுமையான எச்சரிக்கைக்குப் பயந்தே அமெரிக்கா பின்வாங்கியுள்ளதாக ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது.

தங்கள் நாட்டு எரிசக்தி நிலையங்கள் தாக்கப்பட்டால், பதிலுக்கு அமெரிக்காவின் ஒட்டுமொத்த எரிசக்தித் துறையையும் முடக்குவோம் என ஈரான் விடுத்த மிரட்டலே டிரம்பின் இந்த மாற்றத்திற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

இரு நாடுகளும் தற்போது மோதலுக்குப் பதிலாகத் தீர்வை நோக்கி நகர்ந்து வருவதாகத் தெரிந்தாலும், ஹோர்முஸ் ஜலசந்திப் பகுதியில் நிலவும் பதற்றம் இன்னும் முழுமையாகக் குறையவில்லை.

இந்த ஐந்து நாள் போர்நிறுத்தக் காலத்தில் எட்டப்படும் முடிவுகளைப் பொறுத்தே மத்திய கிழக்கில் அமைதி திரும்புமா என்பது உறுதியாகும்.