அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான தனது கடும் போக்கைச் சற்று தளர்த்தி, அடுத்த ஐந்து நாட்களுக்கு அந்நாட்டின் எரிசக்தி நிலையங்கள் மீது எந்தத் தாக்குதலும் நடத்தப்படாது என அதிரடியாக அறிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதால், இந்த ஐந்து நாட்கள் அவகாசத்தை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என 48 மணி நேரக் கெடு விதித்திருந்த டிரம்ப், தற்போது பின்வாங்கியிருப்பது உலக நாடுகளிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பணியாத ஈரான், ஒருவேளைத் தாக்குதல் நடத்தப்பட்டால் பாரசீக வளைகுடா முழுவதையும் மூடிவிடுவோம் என்றும், கடல் பாதையில் கண்ணிவெடிகளை வைத்து கப்பல் போக்குவரத்தை முடக்குவோம் என்றும் கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த மிரட்டலால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்படும் என்ற அச்சமே டிரம்பை இந்த முடிவுக்குத் தள்ளியதாகக் கருதப்படுகிறது. இந்த ஐந்து நாள் போர்நிறுத்தக் காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையே ஆக்கப்பூர்வமான உடன்பாடு எட்டப்பட்டால், மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.