அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் விவகாரத்தில் வெறும் எட்டு மணி நேரத்திற்குள் தனது அதிரடிப் போக்கைக் கைவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயார் என அறிவித்துள்ளது உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப் போவதில்லை என்றும், ஒரு வார கால போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஈரானின் உச்ச தலைவர் மற்றும் முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்ட பிறகும், அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராகத் திரும்பாததும், மொசாட் அமைப்பின் கணக்கீடுகள் தோல்வியடைந்ததும் டிரம்பின் இந்தத் திடீர் மாற்றத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

மேலும், நேரடியாக ஈரான் மண்ணில் இறங்கிப் போர் புரிவது அமெரிக்காவிற்குப் பெரும் உயிரிழப்புகளையும் சர்வதேச அளவில் அவமானத்தையும் தேடித்தரும் என டிரம்ப் அஞ்சியுள்ளார்.‌ வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஓமன் ஆகியவற்றிடமிருந்து அமெரிக்காவிற்கு வந்த கடுமையான அழுத்தமும் இந்த முடிவுக்கு ஒரு முக்கியக் காரணமாகும்.

அமெரிக்கா ஈரானைத் தாக்கினால், பதிலுக்கு ஈரான் தங்கள் நாட்டு எண்ணெய் கிணறுகளைத் தாக்கும் என வளைகுடா நாடுகள் பயந்தன. அதேபோல், ஹோர்முஸ் ஜலசந்திக்கு அமெரிக்கப் போர்க்கப்பல்களை அனுப்பினால், அவை ஈரானின் சிறிய படகுகளால் கூட எளிதில் சேதப்படுத்தப்படலாம் என்ற பாதுகாப்பு ஆலோசகர்களின் எச்சரிக்கையும் டிரம்பை யோசிக்க வைத்துள்ளது.

நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகள் கூட இந்தப் போரில் அமெரிக்காவிற்கு ஆதரவு அளிக்க முன்வராததால், வேறு வழியின்றி டிரம்ப் தனது பிடிவாதத்தை விடுத்துப் பின்வாங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.