விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் கோவிந்தன், தனது மனைவி ரேணுகாவின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அவரோடு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த ரேணுகா, கணவரைப் பிரிந்து தனது தாய் வீட்டிற்குச் சென்று வசித்து வந்தார். மனைவியின் இந்த முடிவு கோவிந்தனின் ஆத்திரத்தை மேலும் அதிகரித்த நிலையில், அவர் ரேணுகா மீது தீராத வன்மத்தை வளர்த்துக் கொண்டு பழிவாங்கக் காத்திருந்தார்.

சம்பவ நாளில்  ரேணுகா தனது வீட்டின் அருகே உள்ள முள்தோப்பிற்குச் சென்றபோது, இருட்டில் மறைந்திருந்த கோவிந்தன் திடீரென வழிமறித்துத் தான் வைத்திருந்த கத்தியால் அவரைத் தலையில் சரமாரியாக வெட்டினார். பலத்த காயமடைந்த ரேணுகாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள், கோவிந்தன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த ரேணுகாவை மீட்ட போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்இந்த கொடூரக் கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த கோவிந்தனைத் தீவிரமாகத் தேடி பிடித்துக் கைது செய்தனர்.

சந்தேகப் பேயால் கணவன் கையில் எடுத்த ஆயுதம், ஒரு பெண்ணின் உயிரைப் பறித்ததோடு மட்டுமில்லாமல், அவர்களின் மூன்று குழந்தைகளின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.