கேரளாவின் குருவாயூர் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரும், அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவருமான பி. கோபாலகிருஷ்ணன், தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். கடந்த 50 ஆண்டுகளாக குருவாயூர் தொகுதியில் ஒரு ‘இந்து எம்.எல்.ஏ’ கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும், இடதுசாரி மற்றும் வலதுசாரி கூட்டணிகள் திட்டமிட்டே இந்து வேட்பாளர்களைப் புறக்கணிப்பதாகவும் அவர் தனது முகநூல் வீடியோவில் குற்றம் சாட்டினார்.

இவருடைய இந்தப் பேச்சு அப்பகுதியில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோபாலகிருஷ்ணனின் இந்தப் பேச்சுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளது.

அதேபோல், காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான கே.எஸ்.யு , இது தொடர்பாக திருச்சூர் காவல் ஆணையரிடம் புகார் அளித்ததுடன், கோபாலகிருஷ்ணனைத் தகுதி நீக்கம் செய்யக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. மத ரீதியாகப் பேசி வாக்குகளைச் சேகரிப்பதாக அவர் மீது பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.