ஹைதராபாத்தைச் சேர்ந்த 23 வயது இளம் மருத்துவரான பிரின்ஸி என்பவர், பூனை வளர்ப்பது தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விலங்குகள் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர், சமீபத்தில் ஒரு பூனையைத் தத்தெடுத்து வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.
ஆனால், அந்த பூனையால் பிரின்ஸிக்குத் தொடர் சளியும் இருமலும் ஏற்பட்டதால், அவரது தாயும் பாட்டியும் பூனையை வீட்டிற்கு வெளியே விட்டுவிடுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதனால் குடும்பத்தினருக்கும் அவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு மன உழைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரின்ஸி தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த அவரது தாயும் பாட்டியும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பிரின்ஸி சடலமாக மீட்கப்பட்டார்.
மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு மேல் படிப்பிற்குத் தயாராகிக் கொண்டிருந்த ஒரு இளம் பெண், ஒரு பூனைக்காகத் தனது உயிரை மாய்த்துக் கொண்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அல்வால் பகுதி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
