அமெரிக்காவின் உலகப் புகழ்பெற்ற கிராண்ட் கேன்யன் தேசியப் பூங்காவில் படம் பிடிக்கப்பட்ட அணில் ஒன்றின் வீடியோ, தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி உலகெங்கும் உள்ள நெட்டிசன்களின் இதயங்களைக் கொள்ளையடித்து வருகிறது. அந்த வீடியோவில், ஒரு சிறிய அணில் அங்குள்ள சுற்றுலாப் பயணிகளிடம் சென்று, தனது இரு முன்னங்கால்களையும் நீட்டி, மிகவும் நயமாக உணவு கேட்பது போல சைகை செய்கிறது.
இதுவரை 5 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களையும், 40 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ள இந்த வீடியோ, பார்ப்பவர்களைப் புன்னகைக்க வைத்துள்ளது. இந்த வீடியோவைப் பகிர்ந்த குடும்பத்தினர், “விலங்குகள் எவ்வளவுதான் நமக்கு நெருக்கமாக வந்தாலும், வனவிலங்கு பாதுகாப்பு எச்சரிக்கைகளை நாம் மதிக்க பழக வேண்டும்” என்ற விழிப்புணர்வு செய்தியையும் அதனுடன் பகிர்ந்துள்ளனர்.
View this post on Instagram
இந்த அணிலின் செயல் பார்ப்பதற்குப் பரிதாபமாகவும் அழகாகவும் இருந்தாலும், கிராண்ட் கேன்யன் பூங்கா நிர்வாகம் அங்கு வைத்துள்ள எச்சரிக்கை பலகை சுற்றுலாப் பயணிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்தப் பலகையில், பூங்காவின் ‘மிகவும் ஆபத்தான உயிரினம்’ இந்த அணில்கள்தான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு விலங்குகளால் ஏற்படும் காயங்களில் அணில் கடிதான் முதலிடத்தில் உள்ளது.
மனிதர்கள் தொடர்ந்து உணவளிப்பதால் இந்த அணில்கள் ஆக்ரோஷமாக மாறக்கூடும் என்றும், இவற்றின் மூலம் நோய்த்தொற்றுகள் பரவ வாய்ப்புள்ளதால் அவற்றுக்கு உணவளிக்கவோ, தொடவோ வேண்டாம் என்றும் பூங்கா நிர்வாகம் கடுமையான விதிகளை விதித்துள்ளது. வனவிலங்குகளுக்கு உணவளிப்பது அவற்றை மனிதர்களைச் சார்ந்திருக்கச் செய்து, இயற்கையாக உணவு தேடும் திறனை அழித்துவிடும் என்பதால், எவ்வளவு கியூட்டாக இருந்தாலும் வனவிலங்குகளைத் தூரத்திலிருந்து ரசிப்பதே பாதுகாப்பானது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
