மேற்கு ஆசியாவில் பல மாதங்களாக நீடித்து வரும் பயங்கர மோதலுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வதற்கு அமெரிக்காவும் ஈரானும் கடந்த ஜூன் 14-ஆம் தேதி பரஸ்பரம் ஒப்புக்கொண்டுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ கையெழுத்திடும் விழா சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் வரும் ஜூன் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், லெபனான் உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் ராணுவ நடவடிக்கைகள் உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்தப்படும் என்று இரு தரப்பும் அறிவித்துள்ளதாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனுடனான எந்தவொரு போர்நிறுத்த ஏற்பாட்டிலும் லெபனான் சேர்க்கப்பட வேண்டும் என்று ஈரானும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் வேளையில், ஹிஸ்புல்லா குழுவிற்கு எதிராகத் தனது ராணுவ நடவடிக்கைகளைத் தொடரவே இஸ்ரேல் விரும்புவதால் இந்த விவகாரத்தில் பெரும் முரண்பாடு நீடித்து வருகிறது. ​இந்நிலையில் பிரான்ஸின் எவியன் நகரில் நடைபெறும் ஜி-7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக கத்தார் அமீர் தமிம் பின் ஹமத் அல் தானியைச் சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், நான் இல்லாவிட்டால் இஸ்ரேல் என்ற நாடே இருந்திருக்காது என்று அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் – லெபனான் போரைச் சிறிய அளவிலான போர் என்று சுட்டிக்காட்டிய ட்ரம்ப், இஸ்ரேல் நடத்தும் தாக்குதலால் லெபனானில் அப்பாவி மக்கள் அதிகளவில் கொல்லப்படுவதை ஒப்புக்கொண்டதோடு, தேடப்படும் நபர் ஒருவருக்காக ஒட்டுமொத்த அடுக்குமாடி குடியிருப்பையும் இடித்துத் தள்ள வேண்டிய அவசியமில்லை என்றும் நெதன்யாகு பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார். மேலும், ஹிஸ்புல்லாவை எதிர்கொள்ளும் பொறுப்பைச் சிரியாவிடம் ஒப்படைக்குமாறு இஸ்ரேலிடம் தான் பரிந்துரைத்துள்ளதாகவும், இந்த இஸ்ரேல் – லெபனான் மோதல் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான கட்டமைப்பு ஒப்பந்தத்தைப் பாதிக்காது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.