மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரம் இரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாலை ஒரு நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது. அரசு ஊழியரான ஒரு தாய், தனது 8 வயது மகளை ஓடும் இரயிலின் முன் திடீரென தள்ளிவிட்டுள்ளார்.

இரயில் என்ஜின் மோதி தண்டவாளத்திற்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிக்கொண்ட அந்த சிறுமிக்கு தலை, இடுப்பு மற்றும் தோள்பட்டை பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் அதிக அளவில் வெளியேறியது.

உடனடியாக மீட்கப்பட்ட அந்த சிறுமி, தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் போபாலில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தன்று தாயும் மகளும் சுமார் மூன்று மணி நேரம் நடைமேடையில் காத்திருந்ததும், இரவு 7:40 மணியளவில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் இரயில் வந்தபோது தாய் இந்த விபரீத முடிவை எடுத்ததும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

காயத்தால் துடித்த சிறுமியை மக்கள் காப்பாற்ற முயன்றபோது, “அவளைக் காப்பாற்ற வேண்டாம்” என்று அந்தத் தாய் கூறியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விசாரணையில், கணவரை இழந்த அந்தப் பெண் கடந்த சில ஆண்டுகளாக மனநலப் பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.